நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லை பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருநாடுகளை சேர்ந்தவர்களில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 17 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதில், 11 பேர் சீன எல்லைக்குள்ளும், ஆறு பேர், நேபாள எல்லையிலும் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போட் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சீனா மற்றும் நேபாளத்தை இணைக்கும், மைத்ரி எனப்படும் நட்பு பாலம், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், ஆறு சீனர்கள் உட்பட, 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக, நேபாள அரசு கூறியுள்ளது. மேலும், திபெத்தில் உள்ள பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று வானிலை முன்னறிவிப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.
போலீசார் எட்டு உடல்களை மீட்டுள்ளனர், அவற்றில் எதுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் பினோத் கிமிரே ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 57 பேர் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜா ராம் பாஸ்நெட் தெரிவித்தார். நேபாளத்தில் குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம், மலை எல்லைப் பகுதியில் சீனப் பகுதியில் 11 பேரைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததால் நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாளத்தில், காணாமல் போனவர்களில் ஆறு சீனத் தொழிலாளர்கள் மற்றும் மூன்று காவல்துறையினர் அடங்குவர் என்று தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) X இல் தெரிவித்துள்ளது.