வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடைமுறை ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், விதிவிலக்காக ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட்டு வருகின்றன. எந்தெந்த வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை ரத்து செய்துள்ளன என்பதை பார்க்கலாம்.
பரோடா வங்கி (Bank of Baroda): பரோடா வங்கியின் முக்கிய மாற்றம் ஒன்று ஜூலை 1, 2025 முதல் நடைமுறையில் வந்துள்ளது. அதன்படி, நிலையான சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த கட்டணம் இனி வசூலிக்கப்படாது என வங்கி அறிவித்துள்ளது.
இந்த முடிவு, வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வரவேற்கத்தக்கதாக உள்ளது. ஆனால், பிரீமியம் சேமிப்புக் கணக்குத் திட்டங்கள் (Premium Savings Account Schemes) எனப்படும் சிறப்பு சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் இந்த விலக்கு பொருந்தாது. அவைகளில், குறைந்தபட்ச இருப்பை பூர்த்தி செய்யாததற்கான கட்டண வசூல் தொடரும்.
இந்தியன் வங்கி (Indian Bank): குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது. இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை, சமீபத்தில் பரோடா வங்கி அறிவித்த மாற்றத்திற்கு பின்னரே வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பரோடா வங்கி பிரீமியம் சேமிப்பு கணக்குகள் தவிர மற்ற சேமிப்புக் கணக்குகளில் மட்டும் கட்டணத்தை ரத்து செய்திருந்தது. ஆனால் இந்தியன் வங்கி, அனைத்து வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் பொதுவாக இந்த விலக்கை அறிவித்துள்ளது.
கனரா வங்கி (Canara Bank): மே 2025ல், கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வழக்கமான சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள் (Salary Accounts), NRI சேமிப்புக் கணக்குகள் உட்பட அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும், குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யாததற்காக விதிக்கப்பட்ட கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
PNB: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), வாடிக்கையாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளிலும் (Regular, Salary, NRI உள்ளிட்டவை) குறைந்தபட்ச சராசரி இருப்பு கட்டணத்தை முற்றிலுமாக நீக்கியது.
பாரத ஸ்டேட் வங்கி (Sate Bank of India): பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020 முதல் சராசரி குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யாத சேமிப்புக் கணக்குகளிடம் கட்டணம் வசூலித்து வந்தது. ஆனால், தற்போதைய நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
Read more: தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடணுமா? இல்ல சர்க்கரையா? எது நல்லது? நிபுணர் பதில்..