சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 3 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.699 ஆக இருந்தது.
ஆனால், இந்த ஆட்சியில் அது ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதி தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிகிச்சை முறைகள் 1,450 ஆக இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் 1,513 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2, தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில், காப்பீட்டு திட்டமானது பெரியளவில் பயன்பாட்டில் இருக்கிறது. அதேபோல், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மற்றொரு சிறப்பான திட்டமும் உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் படி, 2021 டிசம்பர் 18ஆம் தேதி தமிழக முதல்வரால், மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் 1 லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1,81,860 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடியாகும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்” என்று கூறினார்.