அன்புமணி தன் பெயரின் பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் நேற்று பாமகவின் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ”என்னை ஐந்து வயது குழந்தை என்கிறார்கள். அந்த ஐந்து வயது குழந்தை தான், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உங்களை தலைவராக்கியது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். என் பேச்சைக் கேட்காதவர்கள் (அன்புமணி), என் பெயரை பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால், இன்ஷியலைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இராமாயணத்தில், தசரதர் 14 ஆண்டுகள் ராமரை வனவாசம் போகச் சொல்லும்போது, ராமரின் முகம் ‘அன்று பூத்த செந்தாமரை போல் இருந்தது’ எனச் சொல்லப்பட்டுள்ளது. நாம், செயல் தலைவராக இருந்து, மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களைப் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள் என்றுதானே சொல்கிறோம்?” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மாவட்ட செயலாளர் ஸ்டாலினுக்கு, அன்புமணி மீது உள்ள பாசம் போகாததால், அவரது புகைப்படத்தை இந்த பொதுக்குழு கூட்ட மேடையில் வைத்துள்ளார் என கிண்டலாக குறிப்பிட்ட ராமதாஸ், பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற கேள்விக்கு, காற்று போகாத இடத்திற்கு கூட நீங்கள் (ஊடகம்) செல்வீர்கள். உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. உங்களிடன் அறிவித்த பிறகு கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.
Read more: அடுத்த அதிரடி!. கனடா மீது 35% வரி விதித்த டிரம்ப்!. ஆகஸ்ட் 1 முதல் அமல்!.