வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.
சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் தங்கள் மீது நடைபெறும் அவமதிப்பு, பயமுறுத்தல், பாலியல் தொந்தரவு குறித்து சொல்லத் துணிந்தனர்.
இதில் 18 சிறுமிகள், தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், கிளாம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர் அதில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் காப்பகத்தை சேர்ந்த பிரியா, காப்பக ஓட்டுநர் பழனி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே விசாரணையின் போது அருள்தாஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரியா மற்றும் பழனி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மொத்தமாக பழனியால் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட காப்பகத்தில் தங்கியிருந்த அனைத்து குழந்தைகளும் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கே மாற்றப்பட்டு, பாதுகாப்பான சூழலில் வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் காப்பகத்திலேயே கார் ஓட்டுநர் 18 சிறுமிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Read more: நள்ளிரவில் கோரம்.. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 விவசாயிகள் பலி..!!