ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆற்றல் அதிக நிறைந்திருக்கும் ஒரு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மிக சக்தி வாய்ந்தது என்பது அற்புதமான பலன்களை தரக் கூடியது.
அதிலும் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு, உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் குடும்ப சுபிட்சத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இன்று வீடுகளில் கூழ் காய்ச்சி வாழைக்காய் கத்திரிக்காய், முருங்கைக்கீரை காரமணி குழம்பு, இவற்றோடு கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள். இன்றைய தினம் ஏழை எளியோருக்கு இதை அளித்தால், பல ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் சனி பகவானால், ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இதில் ஒன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளாகும். ஆடி முதல் ஞாயிறுக்கிழமையான இன்று கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்னும் சிறப்பானது ஆகும். எப்போதும் எந்த வழிபாட்டை துவங்குவதற்கு முன்பும் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். அதன் படி ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பு. ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் பலரது குடும்பத்தின் வழக்கமானதாக உள்ளது.
குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, அதை வீட்டில் இருக்கும் குல தெய்வம் படத்திற்கு முன்பாக வைத்து படைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்த குலதெய்வத்திற்கு பூஜை செய்து மனதார வழிபட வேண்டும். பிறகு நைவேத்தியமாக படைத்த சர்க்கரை பொங்கல் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்.