ரூ.3,500 கோடி மதுபான ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச சிஐடி விசாரணையில், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபர்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிஐடி சனிக்கிழமை விஜயவாடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
சில நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்களுக்கு சாதகமாக இருந்ததாகக் கூறப்படும் மதுபானக் கொள்கையின் காரணமாக, ஜூன் 2019 முதல் மே 2024 வரை ஒவ்வொரு மாதமும் ரூ.50-60 கோடி லஞ்சமாக ஈட்டப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
YSR காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மற்றும் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பி.வி. மிதுன் ரெட்டி சனிக்கிழமை கைது செய்யப்பட்டதைக் கடுமையாக கண்டித்து, ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான YSRCP, தெலுங்கு தேசம் கட்சி (TDP) அரசுக்கு கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுவந்த அறிவிப்பில், “இந்த வழக்கு முழுவதும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தான் நடத்தப்படுகிறது. அதிகாரத்தின் மூலம் பழி தீர்க்கும் முயற்சியாகவே இது காணப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளது.
குற்றப்பத்திரிக்கையின்படி, ரூ.3,500 கோடி ஊழலின் மூளையாக முதல் குற்றவாளி காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார். லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம், ராஜசேகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அந்த லஞ்சப்பணத்தை 5-வது குற்றவாளி விஜய் சாய் ரெட்டி, 4-வது குற்றவாளி மிதுன் ரெட்டி, 33-வது குற்றவாளி பாலாஜி ஆகியோருக்கு ராஜசேகர் ரெட்டி அனுப்பி வைப்பார். அதை அப்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார். மாதந்தோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டது.
ராஜசேகர் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக ரூ.250 முதல் ரூ.300 கோடியை திருப்பி விட்டார். சட்டவிரோத பண பரிமாற்றத்துக்காக 30 போலி மதுஆலைகள் உருவாக்கப்பட்டன. லஞ்சம் கொடுக்க விரும்பாத மது ஆலைகளுக்கு உரிய அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. துபாய், ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துகள் ஆகியவற்றை வாங்க ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டது.
புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்திய முக்கிய குற்றவாளி மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக சிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, தங்களுக்குப் பிடித்த மதுபான நிறுவனங்களிடமிருந்து அதிக கமிஷன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.
மதுபான ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், இந்த வழக்கின் பின்னணியில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செயல்படுவதாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி கூறினார்.
இதையடுத்து, “ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், தனியார் நிறுவனங்களில் இருந்து மதுபான வர்த்தகத்தை அரசின் கீழ் கொண்டு வந்து விலை குறைத்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில் இதனை மீண்டும் தனியாரிடம் ஒப்படைத்து ஊழலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தினார். மேலும், அவர் தனது ஆதரவாளர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கினார்,” என்று ராமகிருஷ்ணா ரெட்டி கடுமையாக குற்றம் சாட்டினார்.