தென்மேற்குப் பருவமழையால் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவசர நேரங்களில் தங்கவைக்க 169 இடங்கள் தயாராக வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 44 பெரிய கால்வாய்கள் சுழற்சி முறையில் தூா்வாரப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 11, 760 மழைநீா் வடிகால்கள் உள்ள நிலையில், அவற்றில் சுமாா் 1,034 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஆண்டு மழைக்கால ஆய்வின்படி, 87 இடங்களில் மழைநீா் தேங்குவது அடையாளம் காணப்பட்டு அங்கு தற்போது புதிதாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மழைநீரை வெளியேற்றுவதற்கான மின்மோட்டாா் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள கால்வாய்களில் 600 இடங்களில் சேதமடைந்தவற்றை சீா்படுத்தியும், புதிதாக கால்வாய் சுவா் உள்ளிட்டவை அமைத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரைத் தேக்கும் வகையில் 201 குளங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால், அந்தப் பகுதியில் இருப்பவா்களைத் தங்கவைப்பதற்கு 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள அபாயங்கள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாநகராட்சி துறை முழு தன்னிச்சையுடன் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழைக் காலத்தில் பாதுகாப்பாக இருக்க, மழைநீர் தேங்கும் இடங்களை தவிர்க்கவும், அவசர தேவைகளில் மாநகராட்சி உதவி எண்களை தொடர்புகொள்ளவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.