வங்கதேச தலைநகர் டாக்காவில் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த விமானப் படை விமானம் கல்வி வளாகத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மாணவர்கள் பலர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில், விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொருகியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு ஏற்படுத்திய விமானம், F-7 BGI வகை போர்விமானம் என அடையாளம் காணப்பட்டது. இது மதியம் 1:06 மணியளவில் தலைநகரின் வடக்கு பகுதியிலுள்ள கல்வி வளாகத்தில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தின் போது மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து அவசர சேவை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் வானத்தை மூடியது போலவே காணப்பட்டது. தீயணைப்பு அதிகாரி லிமா கான், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்தார். ஆனால், உயிரிழந்தவர் யார், மாணவர்களா அல்லது ராணுவத்தினரா என்பதை தெளிவுபடுத்தப்படவில்லை. காயமடைந்தோரின் விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.
விமானியைப் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவர் மீட்கப்பட்டாரா, அல்லது உயிரிழந்தாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியுடன் சிக்கியிருப்பவர்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி விமானம் மாணவர்கள் நிறைந்த பள்ளி வளாகத்தின் அருகில் விழுந்துள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகள் மீதான சிக்கல்கள் எழுந்துள்ளன. கல்வி வளாகங்களுக்கு அருகில் ராணுவ பயிற்சி நடைபெறுவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
Read more: தவெக-வில் இருந்து தாவிய வைஷ்ணவி.. விஜய் மற்றும் தொண்டர்கள் மீது பரபரப்பு புகார்..!!