முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘அவரும், நானும்’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி ‘அவரும், நானும்’ புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் 2-ம் பாகம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் உயிர்மை பதிப்பகம் சார்பாக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நூலினை எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை டாபே குழுமத்தின் இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
நூலின் சிறப்பு பிரதிகளை ஸ்டாலினின் பேரன்கள் இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துர்கா ஸ்டாலின்; இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, தங்களுடைய பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வந்திருக்கும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இவ்வாறு சொன்னதும் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதியும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். அரங்கத்தில் சிரிப்பு சத்தத்தால் நிறைந்தது.
தொடர்ந்து பேசிய துர்கா ஸ்டாலின், “தளபதியும் நானும்” என்று இருந்த இந்த புத்தகம் “அவரும் நானும்” என்று மாறியதை குறிப்பிட்டு , “எனக்கும் என் கணவருக்கும் இடையேயான 50 வருட வாழ்வின் பல தருணங்களை தொகுப்பாக்கிய இந்த புத்தகத்திற்காக கட்சி தலைவராகவும் முதல்வராகவும் இருந்தாலும் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே எனக்காக நேரம் ஒதுக்கி புத்தகத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டிய… இந்த புத்தகம் வெளிவர முழு காரணமாக இருந்த எனது கணவருக்கும் முதல் நன்றி என தெரிவித்தார்.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரால் வர இயலாவிட்டாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருக்கும் எனது கணவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சொல்லப்போனால், கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்குப் போய், நல்லபடியாக நடத்திவிட்டு வா என்று வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான்.
எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன். முதல் பாகம் வெளிவந்தபோது சிறு குழந்தைகளாக இருந்த எனது பேரக்குழந்தைகள் இன்று இந்த புத்தகத்தை மேடையில் பெற்றுக்கொண்டதில் பாட்டியாக முழு திருப்தி அளிக்கிறது . சிறுவயதில் நான் விரும்பி படித்த எழுத்தாளர் சிவசங்கரி மூலம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது ரொம்பவே சிறப்பு என்றார்.
Read more: நிலச்சரிவில் சிக்கி தமிழர் உட்பட 2 பேர் பலி.. வைஷ்ணவி தேவி யாத்திரையின் போது துயரம்..!!