மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் ஜனாதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் ஜனாதிபதி முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அதிரடி தீர்ப்பினை அளித்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதக்களை கிடப்பில் போட்டது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதாவது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு இருந்தார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் 14 கேள்விகள் கேட்டு கூடுதல் விளக்கத்தை கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பி ஜனாதிபதி கடிதம் எழுதிய நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதிகள் விக்ரம்நாத், நரசிம்ஹா, அதுல் சந்தூர்கர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.