தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை பொது அஞ்சலகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சென்னை பொது அஞ்சலகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக 03.08.2025 மற்றும் 04.08.2025 ஆகிய தேதிகளில் பரிவர்த்தனைகள் நடைபெறாது.
எனவே இந்த தேதிகளில் சென்னை பொது அஞ்சலக நிலையத்தில் எவ்வித சேவைகளும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணியால், அனைத்து மக்களுக்கும் மிக சிறந்த முறையில் விரைவான டிஜிட்டல் சேவைகளுக்காக இரண்டு நாட்கள் சேவை இல்லாத நாட்களாக இருக்கும்.
எனவே, பொதுமக்கள் இந்த சேவை இல்லாத நாட்களை கருத்தில் கொண்டு தங்களுடைய அஞ்சலகப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.