தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 10,000 பேருக்கு பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நகராட்சி நிர்வாகத் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறையில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இனி பதவி உயர்வு என்பது புதிய விதிகளின்படியே நடைபெற போகிறது. இந்த புதிய விதிகள் 2023 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, பழைய கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க 6 மாதம் அவகாசம் வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இதன் காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் சுமார் 10,000 பேர் ஒரு மாதத்திற்குள் பதவி உயர்வு பெற இருக்கின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தின் புதிய விதிகளின்படி, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற, பட்டப்படிப்பு கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி செய்தால், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழைய விதிமுறைகளின்படி பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
10ஆம் வகுப்பு படித்தவர்கள், அனுபவ அடிப்படையில் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறலாம். அதன் அடிப்படையில் 10,000 பேர் பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக பதவி உயர்வு வழங்கப்படும். வரும் காலங்களில், புதிய விதிப்படி தான் பதவி உயர்வு வழங்கப்படும். அதற்கேற்ப பணியாளர்கள், தங்களின் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.