மூளையைச் சேதப்படுத்தும் நிஃபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடியுள்ளது கேரள மாநில அரசு. மேலும், 7 கிராமங்களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிஃபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிஃபா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் தான் இந்த 2 பேரும் இறந்துள்ளனர். 3 குழந்தைகள் உட்பட மொத்தம் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் ஒருவரின் 22 வயது உறவினர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மேலும், 4 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளும், 10 மாத கைக்குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது பிற நபர்களின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்று கேரள சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிஃபா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நிஃபா வைரஸை தடுக்க கட்டுப்பாடுகள் :
* அண்டை மாவட்டங்களான கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலருக்கு நிஃபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து உஷார்படுத்தப்பட்டுள்ளது.
* கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யுமாறு பொதுக் கல்வி இயக்குநருக்கு கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
* 7 கிராம பஞ்சாயத்துகளில் (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) 43 வார்டுகளில் யாரேனும் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலை நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே. மெடிக்கல் ஷாப்கள் மற்றும் இதர சுகாதார மையங்களுக்கு கால அவகாசம் இல்லை.
* கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், சமூக விலகல் மற்றும் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பொது அணுகு சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் வழியாக பயணிக்கும் மக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எங்கும் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.
* உள்ளாட்சி அமைப்புகள் அல்லது கிராம அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்க வேண்டும். ஆனால் அரசு, பொதுத்துறை வங்கிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் உத்தரவு வெளியாகும் வரை மூடப்படக்கூடாது.