தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்..
கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை என்றும் கூறினார். பின்னர் அவர் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்திக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து, தாய்லாந்தும் கம்போடியாவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக நேற்று அறிவித்தன.. எனினும் தாய்லாந்து – கம்போடிய மோதலில் சுமார் 33 பேர் உயிரிழந்தனர்.. 168,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்று மலேசியாவில் நடைபெற்றது.. கடுமையன எல்லை மோதலை தீர்க்க அவசர முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் புத்ராம் வெச்சாயாச்சாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக சந்தித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் தங்கள் எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
மலேசியாவில் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பேசிய அவர் ” கம்போடியா மற்றும் தாய்லாந்து இரண்டும் பின்வருமாறு ஒரு பொதுவான புரிதலை எட்டின.. ஜூலை 28, 2025 நள்ளிரவு முதல் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் அமலுக்கு வரும்..” என்று தெரிவித்தார்.