ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் “நண்பரான” இந்தியா ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீத வரியை செலுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார். ட்ரூத் சோஷியலில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில், நண்பர்களாக இருந்தபோதிலும், இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பீட்டளவில் சிறிய வணிகங்களை மட்டுமே செய்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் “ இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக, அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக, உலகிலேயே மிக உயர்ந்தவையாக உள்ளன, மேலும் அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டிருப்பதால், நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகங்களையே செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளனர், மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராக உள்ளனர், இந்த நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் – எல்லாம் நல்லதல்ல! எனவே ஆகஸ்ட் முதல் இந்தியா 25% வரியையும், மேலே உள்ளவற்றுக்கு அபராதத்தையும் செலுத்தும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்..
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்தார்.. அதன்படி இந்தியா 26 சதவீத வரியை செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், அதிகரித்து வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் 90 நாள் வரிகளை நிறுத்துவதாக அறிவித்தார், இதனால் உலக நாடுகள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க நேரம் கிடைத்தது.
அப்போதிருந்து, இரு தரப்பிலும் வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.. எனினும் இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை..
முதல் நீட்டிப்புக்கான காலக்கெடு ஜூலை 9 அன்று முடிவடைந்த நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா விரைந்துள்ளதால், ஆகஸ்ட் 1 வரை மற்றொரு நீட்டிப்பை அவர் அறிவித்தார். எனினும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 26% வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.