படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நீலம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இதில் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் சோகமான வகையில் உயிரிழந்தார்.
அப்போது காரை துரத்தும் காட்சியில், வேகமாக காரை ஒட்டி வந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியத்தால் உயிர்சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித், சண்டைக்கலைஞர் வினோத், தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் நேற்று ஆஜரானார். மதியம் 12 மணியளவில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஆஜரான நிலையில் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்ததை தொடர்ந்து ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கிறார். மேலும், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும், சோபிதா துலிபாலா நாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் எனத் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
Read more: பத்ம ஶ்ரீ விருதுகளுக்கு பரிந்துரை செய்ய இன்றே கடைசி நாள்…!