மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்தார்..
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 21-ம் தேதி தலைசுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது.. மேலும் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.. எனினும் மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.. இதை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் ஆகி வீடு திரும்பினார்..
முதல்வர் வீடு திரும்பியதில் இருந்தே அவரை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.. அந்த வகையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முதல்வர் ஸ்டாலின் அவரின் வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்..
அதே போல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரே நாளில் 2 முறை முதல்வரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.. காலையில் அடையாறு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த ஓபிஎஸ், பின்னர் மாலையில் அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.. அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்ததாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.. மேலும் “ அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை.. உடல்நலனை விசாரிக்கவே சந்தித்தேன்.. அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் இல்லை.. எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.. அரசியலில் எதுவும் நடக்கலாம்..” என்றும் கூறியிருந்தார்..
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்தார்.. முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.. அவருடன் துரை வைகோ உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்துள்ளனர்.. முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து பல தலைவர்கள் சந்திப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. உடல்நலம் குறித்து விசாரிப்பதாக கூறினாலும், தேர்தல் நெருங்குவதால் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன..