கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை அடைய அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக, ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 2016-17 முதல் 2023-24 நிதியாண்டில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்குவதே ஆரம்ப இலக்காக இருந்தது. 2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் கூடுதலாக 2 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்குவதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பு 2011 தரவுத்தளம் மற்றும் இறுதி செய்யப்பட்ட வீட்டுவசதி கணக்கெடுப்பு பட்டியலின் கீழ் உள்ள வீட்டுவசதி பற்றாக்குறை அளவுருக்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 29.07.2025 நிலவரப்படி, அந்த அமைச்சகம் 4.12 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை (கட்டம் I + கட்டம் II) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளது, இதனடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 3.84 கோடி பயனாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன, மேலும் 2.81 கோடி வீடுகள் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.