மலையாள திரைப்பட நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் நேற்று மாலை கொச்சியின் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 51.
ஹோட்டல் ஊழியர்கள் அவர் மயக்கமடைந்ததைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கலாபவன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய இன்று கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னர் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தற்போது, கலாபவனின் உடல் சோட்டாணிக்கராவில் உள்ள எஸ்டி டாடா மருத்துவமனையில் உள்ளது.
மலையாள திரைப்படமான பிரகம்பணம் படப்பிடிப்புக்காக கலாபவன் ஹோட்டலில் தங்கி வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த அவர், செக்-அவுட்டுக்காக வரவேற்பறைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அவர் மயக்கமடைந்து காணப்பட்டார். அவரது அறையில் எந்த சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் என பல்துறை திறனுக்காக கலாபவன் பிரபலமானவர். 1995 ஆம் ஆண்டு வெளியான சைதன்யம் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அவர் பெரும்பாலும் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
மிமிக்ஸ் ஆக்சன் 500 (1995), ஹிட்லர் பிரதர்ஸ் (1997), ஜூனியர் மாண்ட்ரேக் (1997), மாட்டுப்பெட்டி மச்சான், அம்மா அம்மாய்யம்மா (1998), சந்தமாமா (1999), மற்றும் தில்லானா தில்லானா (2003) போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்..
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்வுகளிலும் தோன்றினார். அவரது மறைந்த தந்தை அபூபக்கர் ஒரு நடிகரும் புகழ்பெற்ற நாடகக் கலைஞரும் ஆவார். அவர் பல மலையாள படங்களில் நடித்திருந்தார். கலாபவன் நவாஸின் மனைவி ரெஹானா மற்றும் சகோதரர் கலாபவன் நியாஸ் ஆகியோரும் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஆபரேஷன் அகல் : ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..