சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் நாளான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை துவங்கியது. இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இந்தமசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.
திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது. 33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதா முன்மொழிகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.
நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சர்களுடன் கூடிய 90 நிமிடம் நீடித்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வின் முதல் நாள் திங்கள்கிழமை பழைய கட்டிடத்தில் தொடங்கியது. இன்று நாடாளுமன்ற அவை அருகில் உள்ள புதிய அதிநவீன கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.