நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்நாள் நோயாகவே தொடரும் என பலர் அச்சப்படுகின்றனர். ஆனால் விராட் கோலியின் ஊட்டச்சத்து நிபுணரான ரியான் பெர்னாண்டோ இதை மறுத்துள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “நீரிழிவு ஒரு நிரந்தர நிலை அல்ல, மீளக்கூடியது” என்று வலியுறுத்தியுள்ளார்.
பெர்னாண்டோவின் பார்வையில், நீரிழிவை மாற்றும் ரகசியம் மருந்துகளில் அல்ல, நம்முடைய அன்றாட உணவுமுறையில்தான் உள்ளது. குறிப்பாக நிலையான கார்போஹைட்ரேட் அளவுகளை உட்கொள்வது முக்கியம் என அவர் கூறுகிறார். ஒரு நாளில் தோசை, மறுநாளில் வறுத்த அரிசி போன்ற ஏற்ற இறக்கமான உணவுகள், உடலில் இன்சுலின் சீரற்ற முறையில் உற்பத்தியாகச் செய்யும், இது நீரிழிவை அதிகரிக்கச் செய்யும் என்றார்.
அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் ஒரே அளவு.. எடுத்துக்காட்டாக 60 கிராம் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வது உடலில் இன்சுலின் செறிவை நிரம்பவைக்கும், அது நீரிழிவை கட்டுப்படுத்த வழிவகுக்கும் எனும் வாதத்தை முன்வைத்தார். இதுகுறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை உட்சுரப்பியல் நிபுணரும் நீரிழிவு ஆலோசகருமான டாக்டர் எஸ். ராம்குமார் கூறுகையில்,
அரம்ப நிலை வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, எடைக் குறைப்பும், உணவுமுறை மாற்றங்களும், உடற்பயிற்சியும் நிவாரணம் தரக்கூடியவை. ஆனால் மேம்பட்ட நிலை, அல்லது இன்சுலின் சார்ந்த நிலை வந்துவிட்டால் மீள முடியாது. வகை 1, மருந்து தூண்டப்பட்ட, கர்ப்ப கால, கணைய நீரிழிவு போன்ற பிற வகைகளில் மீட்பு சாத்தியமில்லை என்றார்.
டாக்டர் ராம்குமார் கூறுகையில், ஒரே மாதிரியான கார்போஹைட்ரேட் அளவை உட்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டி தெளிவற்றதும், உலகளாவிய ஆதர்வற்றதும் எனக் கூறினார். எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான ஆலோசனை பொருந்தாது; தனிப்பயனான மருத்துவத் திட்டங்கள் தான் நீரிழிவை மேலாண்மை செய்ய சிறந்த வழி எனக் கூறினார்.
பெர்னாண்டோவின் கருத்துகள் சிந்திக்க வைக்கும். அதே சமயம் அவை மருத்துவ ஆதாரத்துடன் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். உங்கள் நீரிழிவு நிலையை மாற்ற விரும்பினால், அது உங்கள் நிலைமைக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனையுடன், உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வது முக்கியம்.
Read more: சிக்கன் முட்டை விலை கிடுகிடு சரிவு.. அசைவ பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!