35 ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்த ETH சூரிச் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சி குழு, மேல் வளிமண்டலத்தில் சுழலும் தூசித் துகள்கள், குறிப்பாக பாலைவனங்களில் இருந்து எழும் தூசி, மேகங்களை உறையவைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை கண்டறிந்துள்ளது.
இது மழை, வெப்பநிலை, மற்றும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு போன்றவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்த்துப் பரந்து விரிந்த வடக்கு அரைக்கோளத்தில், வானிலை மாற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய மறைமுக சக்தியாக மேல் வளிமண்டல தூசி துகள்கள் உருவெடுத்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது.
ETH சூரிச் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆய்வில், 35 ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், சஹாரா போன்ற பாலைவனங்களில் இருந்து காற்றுடன் வரும் தூசி துகள்கள், மேகங்களில் பனிக்கட்டி துளிகளை உருவாக்கி, அதனால் மேகங்கள் உறையும் நிகழ்வுகளை தூண்டுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
“தூசி அதிகம் உள்ள இடங்களில் மேகங்கள் உறைவது அதிகம்,” என ETH சூரிச் வளிமண்டல இயற்பியல் ஆய்வாளர் டியாகோ வில்லனுவேவா தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அதிக சூரிய ஒளி விண்வெளிக்கு திரும்பச் செல்லும். இதுவே வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவை மாற்றுகிறது.
இதுவரை, உலகளாவிய அளவில் பனித் துளிகள் எப்படி உருவாகின்றன என்ற விஷயத்தில் நேரடி தரவுகள் இல்லாத சூழலில், செயற்கைக்கோள் தகவல்கள் ஆய்வக முடிவுகளுடன் இணைந்திருப்பது, காலநிலை மாதிரிகளை மேலும் துல்லியமாக்க உதவுகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சஹாரா, சைபீரியா, கனடா, வட அட்லாண்டிக் உள்ளிட்ட இடங்களில் இந்த தூசி-பனி தொடர்பான தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதேபோல், வளிமண்டல ஈரப்பதம், மேல்நோக்கும் காற்றுகள் போன்ற பிற காரணிகளும் மேல்மட்ட மேக அமைப்பை தீர்மானிக்கின்றன.
தூசி – காற்றின் வழியாக கண்ணுக்குத் தெரியாமல் பயணித்து, மேகங்களை உறைய வைக்கும் இந்த இயற்கைச் செயல்முறை, எதிர்கால வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை கணிக்க புதிய கோணத்தைக் கொண்டு வருகிறது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாதிரிகளுக்குப் பெரும் ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: BREAKING| ஒரணியில் தமிழ்நாடு OTP விவகாரம்.. திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!! – உச்சநீதிமன்றம்