கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தோடு தன்னை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சனாதனம் குறித்து உதயநிதி பேசியபோது, மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே சனாதனம் இவ்வாறு பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில், கடந்த செப்.7ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில், சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை – கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரினார். கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தோடு தன்னை தொடர்புபடுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ், கட்சி கொடி, சின்னம், அதிமுக பெயரை பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.