திருப்பூர் உடுமலையில் SSI சண்முகவேல் கொலை வழக்கில் தொடர்புடைய மண்கண்டன் என்கவுன்டரில் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் ஆகியோரும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மூன்று பேரும் நேற்று இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
சண்டையை நிறுத்திய அவர், மூர்த்திக்கு தற்காலிக சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் அனுப்ப ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, சண்முகவேலை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க ஓடியுள்ளார். போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சண்முகவேலை வெட்டி கொன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சரண் அடைந்தனர்.
அதே வேளையில் மணிகண்டன் சரணடையவில்லை. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். மணிகண்டனை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றபோது தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: Alert: இன்று 8 மாவட்டங்களில் கனமழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!