டெல்லியில் பிரதமர் மோடியை கமல்ஹாசன் எம்.பி சந்தித்து பேசி உள்ளார்..
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.. கமல்ஹாசன், வில்சன், சல்மா உள்ளிட்ட 6 தமிழக எம்.பிக்கள் கடந்த 25-ம் தேதி மாநிலங்களவையில் எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்..
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை கமல்ஹாசன் சந்தித்து பேசி உள்ளார்.. எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, கமல்ஹாசன் பிரதமரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.” என்று பதிவிட்டுள்ளார்..
கீழடி அகழ்வாராய்ச்சியின் கலாச்சார மற்றும் தொல்பொருள் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிரதமர் மோடிக்கு கீழடி கருப்பொருள் கொண்ட நினைவுப் பரிசையும் எம்.பி வழங்கினார்.. சங்க காலத்தைச் சேர்ந்த வைகை நதிக்கரையோரத்தில் நகர்ப்புற நாகரிகத்தின் வலுவான சான்றுகளை கீழடி வழங்குகிறது.. இருப்பினும், கீழடி கண்டுபிடிப்புகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் திமுக தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 10% பேருக்கு மட்டுமே தண்டனை.. ED வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது.. உச்சநீதிமன்றம் காட்டம்..