பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு பேறுகால சுகாதார சேவைகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.ஊட்டச்சத்து தொடர்பான சவால்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச் சத்து இயக்கத்தின் கீழ், அங்கன்வாடி சேவைகள் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் வளரிளம் பருவ பெண்களுக்கான நலத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஆறுமாதம் முதல் ஆறுவயது வரையிலான குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) ஆகும். இந்தத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிதியுதவி
கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 5,000 ரொக்கப் பலன் மூன்று தவணைகளாக வழங்கப்படும். முதல் குழந்தைக்காக கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் குறித்த வரம்பு இருக்கலாம். இந்தத் திட்டத்தில் இணையத்தளம் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.