வடமாநில இளைஞர்களுக்காக மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநில புரோக்கரை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 3வது மாடியில் அடிக்கடி இரவு நேரங்களில் சந்தேகப்படும் வகையில் வடமாநில வாலிபர்கள் வந்து செல்வதாக உதவி ஆணையர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 2 இளம்பெண்களை வைத்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கரான ரகிபுல் இஸ்லாம் (30) என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரகிபுல் இஸ்லாமை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட புரோக்கரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரபல பாலியல் புரோக்கர் ஜலினா பேகம் (எ) சொப்பனா மும்பையில் இருந்தபடி கடந்த 2 ஆண்டுகளாக, ரகிபுல் இஸ்லாம் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்காக ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 இளம்பெண்களை மும்பையில் இருந்து அவர் அனுப்பி வந்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வராதபடி வடமாநில வாலிபர்களுக்காக மட்டுமே இவர்கள் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிரபல பெண் பாலியல் புரோக்கர் ஜலினா பேகம் (எ) சொப்பனாவை கைது செய்ய விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.