தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது. மேலும் நேற்றைய தினம் இது தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
உதயநிதியின் சனாதனம் குறித்து கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10கோடி தருவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா, தற்போது உதயநிதியின் தலைக்கு ரூ.10கோடியில் இருந்து 25 கோடியாக உயர்த்தியுள்ளேன் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா கூறியதாவது, “தமிழக அமைச்சர் உதயநிதி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்தேன். ஆனால் அவரை அதை செய்யவில்லை. இதுவே மற்ற மதத்தினரை உதயநிதி விமர்சித்திருந்தால் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. சனாதனத்தை விமர்சித்தமைக்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவர் அதாள பாதாளத்திற்கு சென்றாலும் தப்ப முடியாது. தமிழக அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்த வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாங்களும் விடுத்த எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். உதயநிதியின் தலைக்கு முன்னதாக அறிவித்திருந்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயரத்தியுள்ளேன் என்று கூறினார். அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியாவின் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.