கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா கோயில் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கோயிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, மாநில அரசு, 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
முன்னாள் ஊழியர் அளித்த தகவலின்படி, சில இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிர்ச்சியும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. இதில் சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டது. கர்நாடக மாநில தட்சிண கன்னட மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தர்மஸ்தலா விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த வாரம் வரை ஒரு சில இடங்களில் மட்டுமே ஆய்வுகள் நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை பகபலி மலையில் 10 அடி ஆழத்தில் 20×20 அடி பரப்பளவில் தோண்டியபோதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. அதேபோல, பாயிண்ட் 16 அருகே 15 அடி தூரத்தில் தேடுதல் நடத்தியபோதும் ஆதாரம் ஏதும் இல்லை.
இதுவரை மொத்தம் 16 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 6 மற்றும் 10ஆவது இடங்களில் மட்டுமே எலும்புக்கூடுகள் கிடைத்தன. 13ஆவது இடத்தில் தொழில்நுட்ப பிரச்சினையால் ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென இருவர் முன்வந்து, சில உடல்கள் புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் சொன்ன இடத்தில் அடுத்த கட்ட விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், கர்நாடக பாஜக, தர்மஸ்தலாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. சிக்பல்லாபுரா பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர். விஸ்வநாத், “தர்மஸ்தலா புனித தலம். அதை குறைத்து பேசுபவர்களுக்கு எதிராக ஆகஸ்ட் 16-ஆம் தேதி ‘தர்மஸ்தலா சலோ’ பேரணி நடத்தப்படும். 200க்கும் மேற்பட்ட கார்கள் காவிக்கொடிகளுடன் பங்கேற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்து தகவல் தெரிந்தும், உடல்களை புதைத்ததாக கூறுபவர்கள் முதலில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பா கடும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “சிலர் பொய்களை பரப்பி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். இந்து சமூகத்தை இழிவுபடுத்தவும், தர்மஸ்தலா மீது சந்தேகம் ஏற்படுத்தவும் இது செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். தர்மஸ்தலா வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்கள் வெளிவர, மர்மமும், சர்ச்சையும் கூடிக் கொண்டே செல்கிறது.