2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் தரப்பு, தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேசமயம் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் ஓபிஎஸ்ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓபிஎஸ் அணியை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் ஓபிஎஸ் பற்றி யாரும் விமர்சிக்க கூடாது என்று நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ள நிலையில் மீண்டும் ஓபிஎஸ் பாஜக பக்கம் செல்வாரா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
Read more: சூப்பர்..! அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம்….! வெளியான முக்கிய அறிவிப்பு…!