டேவிட் என்ற நபர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் சோனாபம் என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் 6 மாத பெண் குழந்தையை, எலிகள் 50 இடங்களில் கடித்து குதறி விட்டது. இதனையடுத்து, டேவிட் சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கை கால் விரல்கள் என கிட்டத்தட்ட குழந்தையின் உடலில் 50 இடங்களில் எலி கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டை சுற்றி பார்த்த போது குப்பை மற்றும் எலி கழிவுகள் நிறைந்து இருப்பதை போலீசார் கவனித்துள்ளனர். இதனால், குழந்தையை பாதுகாப்பாக வளர்க்காமல், எலி இத்தனை முறை கடித்ததை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறி, பெற்றோர் மற்றும் குழந்தையின் அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெற்றோரின் அலட்சியத்தால் பிஞ்சு குழந்தை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.