சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டைப் பையுடன் வந்த இளைஞர், “சாலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வந்தேன்” என்று பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர் கூறிய இடம் மற்றும் காரணம் குறித்து விசாரிக்க, இளைஞர் முன்–பின் முரண்பாடாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை தன்னுடையது என அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் ஊட்டியைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி என்றும், சைதாப்பேட்டையில் தங்கி குரூப்–1 தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் தெரியவந்தது. கல்லூரியில் படிக்கும் போதே சேலத்தைச் சேர்ந்த மாணவியுடன் காதல் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாக விடுதியில் தங்கி எம்.எஸ்.சி. படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் ஒன்றாக இருந்ததில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியாமல் விடுதியில் தங்கி வந்துள்ளார். விடுமுறைக்காக மாணவியின் அறையில் இருந்த தோழிகள் சொந்த ஊருக்கு சென்று இருந்த நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விடுதியின் கழிவறையிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக மாணவர்கள் விடுதியில் இல்லாததால் இந்த விவகாரம் விடுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.
பின்னர் மாணவி தனது காதலருக்கு தகவல் அளித்தார். இருவரும் சேர்ந்து குழந்தையை கட்டைப் பையில் வைத்து, ஆகஸ்ட் 8 இரவு 10 மணியளவில் திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கி, அடுத்த நாள் மதியம் குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க முடிவு செய்தனர்.
இளைஞர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது திருவல்லிக்கேணி போலீசாரிடம் சிக்கினார். போலீசார் மாணவியையும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை பிறந்த இடம் கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால், திருவல்லிக்கேணி போலீசார் இளைஞரை கோட்டூர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Read more: “தம்பி மேல தான் எல்லாருக்கும் பாசம்.. அதான் அவன கொன்னுட்டேன்..!!” சின்ன பையன் செய்த பகீர் சம்பவம்..!