நாம் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், உடல் நலம் சரியாக இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும். அதனால், நம் தினசரி செயல்களில் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடலுக்கு தேவையான சக்தியும், ஆரோக்கியமும் பெற, சத்துப்பொருள் நிறைந்த உணவுகளை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், உலர் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஊட்டச்சத்துள்ள உலர் பழங்கள் :
பாதாம், மக்கானா, பேரீச்சம்பழம், பாப்பி விதைகள் போன்ற உலர் பழங்கள் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது. இது உங்கள் செரிமானத்தைக் மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும், மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இதை எப்படி பயன்படுத்தலாம்..?
நாம் உலர் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ள நினைத்தாலும், பல நேரங்களில் மறந்து விடுவோம். அதனால் இதை ஒரு பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால், பாலில் கலந்து எளிதாக குடிக்கலாம். காலை நேரத்தில் பசும்பாலில் கலந்து குடித்தால் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள். இரவில் தூங்கும் முன் எடுத்துக் கொண்டால், உடலை சோர்வில் இருந்து மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
* மக்கானா – 1 கப்
* உலர்ந்த பேரீச்சம்பழம் – ½ கப்
* பாப்பி விதைகள் – ½ கப்
* பாதாம் – 1 கப்
* வறுத்த பருப்பு (பொட்டுக்கடலை) – 1 கப்
செய்முறை :
* ஒரு வாணலியில் முதலில் வறுத்த பருப்பை லேசாக வறுக்கவும். அது மொறுமொறுப்பாக மாறியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின்னர், அதே வாணலியில் மக்கானாவும், பாதாமும் சேர்த்து வறுக்க வேண்டும். மக்கானா லேசாக பொன்நிறமாக மாற வேண்டும்.
* பின்னர், பேரீச்சம்பழத்தில் உள்ள விதைகளை அகற்றி நறுக்கி வைக்கவும். பாப்பி விதைகளோடு சேர்த்து குறைந்த தீயில் லேசாக வறுக்கவும்.
* அனைத்து பொருட்களும் வறுத்ததும், சிறிது நேரம் ஆற விடவும். பிறகு, இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, பொடியாக அரைக்கவும்.
இந்த பொடியை தினமும் 1 டம்ளர் சூடான பாலில் கலந்து குடித்து வரலாம். இதில் உள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை எடுத்துக்கொள்ளலாம்.



