பைக் சாகசம் செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளவர் யூடியூபர் டிடிஎப் வாசன். இவர், கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். பின்னர், கடந்த செவ்வாய் கிழமையன்று டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ஒன்றில், டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ராமன் ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வாசனுக்கு கைகள் உடைந்து இன்னும் அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தால் வாகனத்தை தொட மாட்டார். ஏற்கனவே நாங்கள் லைசன்ஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றார். மேலும், அவருக்கு நிறைய பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அவர் இனி இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் கூட ஒரு டிரைவர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். நூதன தண்டனை ஏதாவது கொடுத்தால் கூட நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என வாதத்தை முன் வைத்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகிய கார்த்திகேயன், சுமார் 40 லட்சம் பாலோவர்ஸ்கள் டி.டி. எஃப் வாசனுக்கு இருக்கிறார்கள். இவருக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன் உதாரணமாக அமையும். யார் வேண்டுமென்றாலும் வாகனத்தை, எப்படி வேண்டுமானாலும், இயக்கிவிட்டு ஜாமினில் வெளி வந்துவிடலாம் என கமெண்ட் செய்வார்கள் என்று வாதிட்டார்.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விபத்துக்குள்ளான வாகனம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமா அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமா என கேட்டார். இதையடுத்து, போக்குவரத்து புலனாய்வு செய்யப்பட்டுள்ளதாக கேள்வியை எழுப்பிய அவர், உடனடியாக போக்குவரத்து புலனாய்வு பணியை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பின்னர், டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்ற திருகுறளுக்கு இணங்க சாகசம் செய்பவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்யக்கூடாது. அப்படி செய்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், அவர் பயன்படுத்திய வெளிநாட்டு பொருட்களுக்கு அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.