பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை இணையத்தில் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்ற சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்திய தேர்தல் ஆணையத்திடம், 2025 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், புதிய வரைவுப் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை இணையத்தில் வெளியிட உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த 65 லட்சம் பேரில் சுமார் 22 லட்சம் பேர் இறந்தவர்கள் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி சூர்யா காந்த், “22 லட்சம் பேர் இறந்திருந்தால், அது ஏன் வாக்குச்சாவடி மட்டத்தில் வெளியிடப்படவில்லை? குடிமக்களின் உரிமை அரசியல் கட்சிகளைச் சார்ந்து இருக்க நாங்கள் விரும்பவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மாவட்ட அளவிலான வலைத்தளங்களில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு பெயருடனும் நீக்கப்பட்ட காரணம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு செவ்வாய்கிழமை வரை கெடு விதித்தது. உச்சநீதிமன்றம், இது குடிமக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கை என்றும், தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கு அவசியமானதாகும் என்றும் குறிப்பிட்டது.