இளம் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் நகங்களை நீளமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு நகங்கள் விரைவாக உடையதால் அவர்கள் விரும்பிய நீளத்தைப் பெற முடியாது. இதனால் உண்மையான நகங்களுக்கு மாற்றாக செயற்கை நகங்கள், நக நீட்டிப்புகள் அல்லது அக்ரிலிக் நெயில்ஸ் போன்றவற்றை தேர்வு செய்வது வழக்கமாகி விட்டது.
இந்த செயற்கை நகங்கள் கைகளுக்கு நாகரிகமான தோற்றத்தையும், ஸ்டைலிஷ் லுக்கையும் தருகின்றன. திருமணங்கள், விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் போன்ற சந்தர்ப்பங்களில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதால் சில முக்கியமான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் அதிகம். அந்த வகையில் செயற்கை நகம் பயன்படுத்திய பெண்ணிற்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு யார்க்ஷயரைச் சேர்ந்த 35 வயதான லூசி தாம்சன், தனது செயற்கை நகங்களை அகற்றியபோது, இடது கட்டைவிரலில் மெல்லிய கருப்பு கோடு தோன்றியதை கவனித்தார். இது அடிபட்டதால் ஏற்பட்டதாக நினைத்து, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் மருத்துவரைச் சந்தித்த போது, பரிசோதனைகளில், அந்த கோடு ஒரு அரிய வகை தோல் புற்றுநோயான சப்அங்குவல் மெலனோமா-வுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
முதல் பரிசோதனைகள் தெளிவாக இல்லாதபோதிலும், இரண்டாவது பயாப்ஸியில் புற்றுநோய்க்கு முந்தைய செல்கள் கண்டறியப்பட்டன. லூசி, “நான் இதை சாதாரனமாக நினைத்தேன். ஆனால் மருத்துவர் புற்றுநோய் சாத்தியம் இருப்பதாக சொன்னதும், என் மனதில் வந்த முதல் எண்ணம் ‘என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?’ என்பதுதான். நான் மிகவும் பயந்தேன்,” என்று கூறினார்.
மருத்துவர்கள், அந்த புற்றுநோய்க்கு முந்தைய செல்களை உடனடியாக அகற்றினர். அவை சிகிச்சையில்லாமல் விட்டிருந்தால், சப்அங்குவல் மெலனோமாவாக மாறி, உடல் முழுவதும் பரவியிருக்கும் அபாயம் இருந்தது. இப்போது, லூசி செயற்கை நகங்களைப் பயன்படுத்துவதை குறைத்து, தனது நகங்களை தொடர்ந்து பரிசோதிக்கிறார். “நகங்களில் மாற்றம், கோடு அல்லது அசாதாரண அடையாளம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஆரம்பகட்ட கண்டறிதல் உயிரைக் காப்பாற்றும்,” என்று அவர் மற்றவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.