தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.
சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், “ஆளில்லா பதிவு” (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சொத்து வாங்குபவர்களோ அல்லது விற்பவர்களோ சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.
தற்போது, ஒரு சொத்தை வாங்கும்போது, வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் அனைவரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கைரேகை வைத்து, புகைப்படங்கள் எடுத்து, ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த புதிய “ஆளில்லா பதிவு” முறையின் கீழ், முதல் விற்பனைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது மனைகளை வாங்கும் போது, இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்படும்.
இந்த செயல்முறைக்காக, ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு, கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனிங் போன்ற உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படும். பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள், தங்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக மென்பொருள் மூலம், வாங்குபவரின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வார்கள். சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், ஆன்லைனில் விண்ணப்பத்தை சரிபார்த்து, பதிவுக்கு ஒப்புதல் அளிப்பார்.
தமிழ்நாட்டில் உள்ள 582 சார்பதிவாளர் அலுவலகங்களில் பெரும்பாலானவை, இடவசதி மற்றும் பார்க்கிங் வசதி குறைவாக உள்ளதால், தினமும் மக்கள் பெரும் நெரிசலை சந்திக்கின்றனர். இந்த திட்டம், அலுவலகங்களின் நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும். பொதுமக்கள், தங்களது வேலைகளை விட்டுவிட்டு, சார்பதிவாளர் அலுவலகங்களில் மணிக்கணக்கில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது, அவர்களின் நேரத்தையும், பயண செலவுகளையும் மிச்சப்படுத்தும்.