மகளிர் நலன், மறுவாழ்வு, அதிகாரம் வழங்குதல், கல்வி, ஆதரவற்ற மகளிருக்கு வேலை வழங்குதல் போன்றவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஸ்வதார்க்ரே திட்டம்:
இத்திட்டம், குடும்ப முரண்பாடு, குற்றம், வன்முறை, மனஅழுத்தம், சமூகப் புறக்கணிப்பு போன்ற கடினமான சூழல்களில் உள்ள மகளிருடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பாதிக்கப்பட்ட மகளிருக்கு, தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, மருத்துவம், பயிற்சி, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஸ்வதார்க்ரே திட்டத்தின்கீழ், பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்:
இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கு விதவை ஓய்வூதியத் திட்டம் அளிக்கப்படுகிறது. இது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழுள்ள ஒரு துணைத் திட்டமாகும். இந்த திட்டத்தில் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் 300 ரூபாயும், 80 வயதை அடைந்தவுடன் மாதம் 500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டம்.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரொக்க ஊக்கத்தொகையைப் பெறுகிறார், இதனால் சராசரியாக, ஒரு பெண் ரூ.6,000 பெறுகிறார்.



