2026 சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது… ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு என்று கூறி வந்த இபிஎஸ் ஆட்சி முடிவுக்கு வந்த போது கட்சியை கைபற்றினார்.. பின்னர் ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டே வெளியேற்றினார்..
இதை தொடர்ந்து ஓபிஎஸ், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை தொடங்கி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார்.. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் ஒருவழியாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார்.. அவரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது..
மேலும் ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.. இதனால் அவர் திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்று தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன..
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலில் அவர் போட்டியிட முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை டிடிவியும் மறைமுகமாக உறுதி செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read more: மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் வேண்டுமா? ஓய்வுக்குப் பிறகு இதைச் செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும்..!