கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பாலியேக்கரா சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை 544-ல் (NH-544) அமைந்துள்ளது. அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் காரணமாக தொடர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள், லாரி டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையை முன்னிட்டு, கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் பாலியேக்கரா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. தனது தீர்ப்பில், “சுங்கக் கட்டணத்தை பொதுமக்கள் கடமையாக செலுத்தும்போது, சீரான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பணி முக்கியமானது.. இந்த நம்பிக்கை மீறப்படும்போது, சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் சட்டப்பூர்வ உரிமையை பொதுமக்கள் மீது திணிக்க முடியாது” உறுதிப்பட தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் வினோத்சந்திரன் மற்றும் என்.வி. ஆஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, நீதிபதிகள் கடும் விமர்சனத்துடன் கேள்வி எழுப்பினர்: “65 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை கடக்க 12 மணி நேரம் எடுத்துக்கொண்டால், பயணி ஏன் ரூ.150 சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்?” எனக் கேள்வியெழுப்பினர். மேலும், “அங்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. இவ்வளவு மோசமான சாலையில் எப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிகிறது” எனக் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, உச்சநீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட மறுத்தது. இதனால், பாலியேக்கரா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வது குறித்து உள்ள உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்தது. இதனால் அப்பகுதியில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால், சாலைப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
Read more: 63 பேர் பலி.. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் நிலைகுலைந்த ஜம்மு காஷ்மீர்..!