திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார்.. இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள்.
அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டி.ஆர் பாலுவின் மனைவி ரேணுகா தேவியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், பிடிஆர் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்..
Read More : திமுக எம்.பி டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!