ஒப்பனை என்பது அழகின் ஓர் அங்கமாக நிகழ்வது மட்டுமின்றி, தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மாறியுள்ளது. அந்த வகையில், பெண்களின் தினசரி ஒப்பனையில் முக்கிய இடம் பிடிப்பது லிப்ஸ்டிக். ஆனால் இந்த சிறிய அழகு சாதனம், அழகை அதிகரிக்கக் கூடியதோடு, சில சந்தர்ப்பங்களில் ஆரோக்கியத்துக்கும் எதிரியாக மாறிவிடுகிறது.
சமீபத்தில் வெளியான ஓர் வீடியோவில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனன் வோரா, லிப்ஸ்டிக் தொடர்பான முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, சில லிப்ஸ்டிக்குகளில் உள்ள குறிப்பிட்ட இரசாயனங்கள், பெண்களின் ஹார்மோன்கள் சமநிலையை பாதிக்கக்கூடியவை என்றும் குறிப்பாக, மெதில் பராபென் (Methyl Paraben) மற்றும் புரோபில் பராபென் (Propyl Paraben) எனும் இரசாயனங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ரசாயனங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே செயல்பட்டு, மாதவிடாய் சுழற்சி மற்றும் மற்ற ஹார்மோன்களுக்கு இடையூறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சில மலிவான அல்லது கண்டுபிடிக்க முடியாத பிராண்டுகளின் லிப்ஸ்டிக்குகளில் BPA (Bisphenol A) போன்ற ஹார்மோன் மாற்றும் ரசாயனங்களும் இருக்கக்கூடும். இந்த ரசாயனங்கள் பிளாஸ்டிக் பேக்கேஜிங் வழியாகவும் லிப்ஸ்டிக்கிற்குள் சேரக்கூடியவை” என்று எச்சரித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்களால் மட்டும் அல்லாமல், அறிவியல் உலகினாலும் லிப்ஸ்டிக் தொடர்பான ஆபத்துகள் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளன. “ScienceDirect” எனும் சான்றிதழ் அளிக்கப்பட்ட மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பல லிப்ஸ்டிக்குகளில் குரோமியம், காட்மியம், சிசம் போன்ற உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை தோல் வழியாக உறிஞ்சி புண்கள், நரம்பியல் பிரச்சனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை.
குரோமியம் அதிக அளவில் உடலுக்குள் சென்றால், அது வயிற்றுப் புண்கள் மட்டுமல்ல, இருதயம் மற்றும் மூளைக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, லிப்ஸ்டிக் வாங்கும் போது, அதன் லேபிளை அவசியம் படிக்க வேண்டும். “Paraben-free”, “BPA-free” போன்ற சான்று எழுத்துகள் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அழகு பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நம்பகமான நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே தேர்வு செய்வது நல்லது.