அமெரிக்க கோடீஸ்வரரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, தனது குழந்தைகளை பராமரிக்க பணியாளரை தேடிவருகிறார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஆசைப்படும் குடியரசுக் கட்சி சார்பாக போட்டிப்போட்டு வரும் விவேக் ராமசாமி சமீபகாலமாக தீவிர பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். 38 வயதான விவேக் ராமசாமிக்கு மூன்று மற்றும் ஒரு வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும் பணிக்கு பணியாளரை தேடி வருகிறார். விவேக் ராமசாமி EstateJobs.com என்ற வேலைவாய்ப்பு தளத்தில் இந்த வேலை குறித்த அறிவிப்பை பதிவிட்டுள்ளார். சுமார் 100,000 டாலர் அதாவது தோராயமாக ரூ.83 லட்சம் சம்பளம் வழங்குவதாக பதிவில் அறிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யும் நபர் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் நபர் மாற்று காலக்கட்டத்தில் பணியாற்ற வேண்டும், அதாவது ஒரு வாரம் வேலை செய்து ஒரு வாரம் விடுப்பு எடுக்கும் வகையில் இருக்கும். சுமார் 26 வாரங்கள் வேலை செய்தாலே போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் கிட்டத்தட்ட வாரந்தோறும் தனியார் விமானப் பயணத்தின் மூலம் பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. வாராந்திர குடும்பப் பயணங்களில் தனியார் விமானங்கள் வழியாக செல்ல வேண்டியிருக்கும்.
மேலும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு சைவ உணவுகளில் கவனம் செலுத்தி, உணவு தயாரிப்பு மற்றும் பழக்கவழக்கங்களுக்கு உதவ வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. விவேக் ராமசாமி-யின் நிகர சொத்து மதிப்பு ஆகஸ்ட் 2023 இல் $950 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது.