சேலத்தில் பத்திரிக்கியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே மட்டுமே தவிர கூட்டணிக்காக இல்லை. தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “அதிமுக பாஜக கூட்டணி முறிவு நாடகம் அல்ல, கூட்டணி விவகாரத்தில் “INDIA” கூட்டணிதான் நாடகமாடுகிறது. திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தால் அது கூட்டணி என்று அர்த்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக அரசு காவிரி நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், திமுக அரசுக்கு அதிகாரமே முக்கியம் தவிர விவசாயிகள் முக்கியம் இல்லை. திமுக அரசு டெல்டா விவசாயிகளை ஏமாற்றுகிறது எனவும் கூறினார்.
மேலும் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக பாஜக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தவறான செய்தி எனவும், தற்போது தெளிவுபடுத்திக்கிறேன், பாஜகவின் மத்தியில் உள்ள தலைவர்கள், அமித்ஷா, நட்டா, பிரதமர் மோடி என யாரும் எங்களுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை, இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தியது. ஒரு கட்சி வளமாக செழிப்பாக வளரவேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும், ஆகவே தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தான் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம், பாஜக அதிமுக குறித்து ஊடகத்தில் வரும் எல்லாம் தவறானவை. மேலும் நாங்களும் பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்றும் கூறவில்லை அதுவும் தவறான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்து வெற்றி பெரும், அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையிலையே நல்ல கூட்டணி அமைந்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.