2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது. இதனால் அக்கூட்டணியை வீழ்த்த 2026ல் நடிகர் சூர்யாவை களமிறக்க திமுக முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக விஜய் வருகையால் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு சரியலாம் என்பதால் அதே பகுதியை சேர்ந்த சினிமா வெளிச்சத்தில் இருக்கும் சூர்யாவை களமிறக்கினால் திமுக வெற்றிக்கு உதவும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இதில் உண்மையில்லை என்று அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று, சமூக வலைதளங்களை மையமாக வைத்து, இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இந்தச் செய்தி உண்மைக்கு மாறான, போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளன. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி உலகளாவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமானவர்களாகிய உங்களுக்கு, எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துகளோடு, சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான இந்தப் போலியான செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்.” எனக் குறிப்பிட்டது.
Read more: தவெக மதுரை மாநாடு.. விதவிதமாக ரெடியாகும் ஸ்னாக்ஸ்! என்னென்ன இருக்கு தெரியுமா?