சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர். உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbslm.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும்.
இந்நியமனத்திற்கான எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.08.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு அத்துறையைச் சார்ந்த சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.