510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர்; இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் அலைவரிசைகளும், 320 கல்வி அலைவரிசைகளும் அடங்கும் என்று கூறினார். எஃப்எம் கோல்டு, ரெயின்போ, விவித் பாரதி உட்பட 48 ஆகாசவாணி அலைவரிசைகளும் டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
2024-ல் “வேவ்ஸ்” என்ற பலவகை டிஜிட்டல் ஓடிடி தளத்தை பிரசார் பாரதி தொடங்கியுள்ளது என்றும், இது தூர்தர்ஷன், ஆகாசவாணி அலைவரிசைகளை ஒருங்கிணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஊரகப் பகுதிகளில் ஊடகங்கள் சென்றடைவதை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது என்று கூறிய அமைச்சர், 2019-க்குப் பின் 264 சமுதாய வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 6 புதிய தூர்தர்ஷன் அலைவரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 17 அலைவரிசைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவல்களையும் தெரிவித்தார். 2020-21 நிதியாண்டு முதல் தற்போது வரை 26 சமுதாய வானொலி நிலையங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.