சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று அந்த மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளதால், அங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது முருகன் என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்தார்.
14 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததாகவும் கீழே விழுந்த ஒரு சில நொடிகளில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 அடி உயரத்தில் வெல்டிங் பணி நடந்து கொண்டிருக்கும் போது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடு இன்றி பணி செய்ய வைத்தது குற்றம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், மைதானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.