புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்து அண்ணாமலை கெளரவித்தார்.
அப்போது , தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜாவின் மகன் சூரிய ராஜாபாலு பதக்கம் வாங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அண்ணாமலை அவருக்கு பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க முயன்றபோது, சூரிய ராஜாபாலு மறுத்தார். கையில் வேண்டுமானால் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன்.
என் கழுத்தில் பதக்கத்தை நீங்கள் அணிவிக்க வேண்டாம்’ என்று சொன்ன சூரியராஜபாலு, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை அப்செட் ஆனார். ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தார். பின்னர் பதக்கத்தை கையில் மட்டும் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்காக நின்றார். இந்த சம்பவத்தால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர், இது அரசியல் காரணத்தால் செய்யப்பட்ட நடவடிக்கை என்று விமர்சிக்கின்றனர். பலர், விளையாட்டு மேடையில் அரசியல் கலந்துரையாடல்கள், பாகுபாடுகள் இடம்பெற கூடாது என்று கூறி அதிருப்தி தெரிவிக்கின்றனர். முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி கையால் பட்டம் வாங்க, நாகர்கோவில் தி.மு.க., நிர்வாகியின் மனைவி மறுத்த சம்பவம் அரங்கேறியது.
அரசியல் ரீதியாக திமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு உள்ளது. எனினும் பொது மேடைகளிலோ, பொது இடங்களிலும் இருகட்சிகளை சேர்ந்தவர்கள் சந்தித்து கொண்டால் மரியாதை நிமித்தமாக பேசி கொள்வார்கள். இத்தகைய அரசியல் மரபு காணப்பட்டு வரும் நிலையில், திமுக அமைச்சரின் மகன், அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: தேமுதிக முக்கிய தலைவர்களை கொத்தாக தூக்கிய EPS.. பிரேமலதா தலையில் இறங்கிய இடி..!! அப்போ கூட்டணி..?